பீம்தாலிலிருந்து நைனிடால் நகருக்குள் நுழையாமல் பவாலி என்னும் ஊர் வழியாக ராணிகேத்-தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு கோயிலுக்கருகே ஓட்டுநர் வண்டியை நிறுத்துகிறார். இந்தியில் ஏதோ ஒரு பெயரை சொல்கிறார். அவர் என்ன பெயரைச் சொன்னார் என்பதை சிரத்தையுடன் கவனிக்கவில்லை. ஓட்டுநர் வண்டியை நிறுத்தியது பிடிக்கவில்லை. சீக்கிரமே ராணிகேத் சென்றடைய வேண்டும் என்றிருந்தது எனக்கு. அங்கு ஒரு ரிஸார்ட்டில் ஒரு suite புக் செய்திருந்தேன். “எனக்கு தேநீர் குடிக்க வேண்டும்” என்றார் ஓட்டுநர். வேண்டா வெறுப்பாக காரிலிருந்து இறங்கினேன். மனைவியும் என் இளைய மகளும் கூட இறங்கினார்கள். பெரியவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.
அது ஒரு ஆசிரமம். துர்கா தேவி சந்நிதியும், அனுமார் சந்நிதியும் இருந்தன. சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிந்தனர். கோயிலின் பின்புறம் ஒரு சுவாமிஜியின் சிலை இருந்தது. சுவாமிஜிக்களுக்கு நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனக்கு அதிகம் ரசிக்கவில்லை. ஆனால் ஒன்று கவனித்தேன். கோயில் செல்வச் செழிப்புடன் இருந்தது. புத்தம்புதுக் கோயிலைப் போல் இருந்தது. கோயிலை விட்டு வெளியேறுவதற்கு முன் சுண்டல் பிரசாதத்தை பெற்றுக் கொண்டோம்.
கோயிலையொட்டி சிற்றோடை இருந்தது. அதை அசுத்தப்படுத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தலில் அது நதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மழைக்காலத்தில் அது நதியாக உருமாறலாம். நதியில் அதிக நீர் மட்டம் இல்லை. பூச்சிகளைப் போல் சின்னஞ்சிறு மீன்கள் கூட்டமாய் நீந்திக் கொண்டிருந்தன. ஒரு சிறுவன் பிஸ்கட்டுத் துண்டின் பொடியை நீரில் வீசினான் ; நூற்றுக்கணக்கான மீன்கள் அப்பொடியைக் கவ்விக்கொள்ளும் போட்டியில் அழகாக ஒரு புள்ளியில் குவியும் காட்சி மிக ரம்மியமாய் இருந்தது. ஒரு கணந்தான். மீண்டும் மீன்கள் தத்தம் திசைகளில் பிரிந்து சென்றன.
நாங்கள் கோயிலுக்கு வெளியே வந்தோம். ஓட்டுனர் வண்டியைக் கிளப்பிய போது கோயிலின் பெயர் என்ன என்று கேட்டேன். kainchi dham என்றார். Kainchi என்றால் கத்திரிக்கோல் என்று அர்த்தம் ; dham என்றால் தலம்.
+++++
கைடுகளுடனான உரையாடல் பல விஷயங்களை அறியத் தூண்டியிருக்கின்றன. கைடுகள் மிஸ்-கைடு செயவது வாடிக்கையான விஷயம் என்றாலும் கைடுகள் அவசியம். வரலாற்றுச் சின்னங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கும் செயல் முறை எளிமையாகுதல் கைடுகளினால் மட்டுமே சாத்தியம். அவர்கள் தரும் வரலாற்றுத்தகவல்கள் நம்மை உண்மைத்தகவல்களை நோக்கிய உந்துதலை ஏற்படுத்தும். சில வருடம் முன்னர் ஓர் ஆங்கிலேய நண்பருக்குத் துணையாக ஆக்ரா சென்றேன். நடுவில் ஒரு கைடை எங்கள் காரில் ஏற்றிக் கொண்டோம். அவர் பெயர் அன்வர். டிப்டப்பாக கருப்பு கோட், கருப்பு கண்ணாடி அணிந்து சினிமா ஸ்டார் போல தோற்றமளித்தார். வி ஐ பி கைடு என்ற அடையாள அட்டையை காண்பித்தார். நானும் நண்பன் அட்ரியனும் பெருமிதப்பட்டோம். அன்றைய ஒரு நாளைக்கு நாங்களிருவரும் அன்வரின் தயவில் வி ஐ பிக்கள் ஆனோம். வழக்கம் போல தாஜ்மகால் நுழைவுச்சீட்டை நீண்ட வரிசையில் நிற்காமலேயே வாங்கினோம். தாஜ்மகாலுக்குள் பல்வேறு விளக்கங்களை கொடுத்துக் கொண்டே ஒரு தகவலை எங்களிடம் சொன்னார் அன்வர். இஸ்தான்புல்லின் நீல மசூதியை கட்டிய ஆர்கிடெக்ட்தான் தாஜ்மகாலையும் கட்டினார். அந்த தகவல் எனக்கு பயங்கர ஆச்சரியத்தை தந்தது. அட்ரியன் இஸ்தான்புல் நீல மசூதியை பார்த்திருக்கிறான். நான் திரைப்படங்களில் நீல மசூதியை பார்த்திருக்கிறேன். கடைசியாக நான் பார்த்தது ஏக் தா டைகர் இந்திப்படத்தில். சல்மான் கானும் கட்ரினா கைஃபும் நீல மசூதியின் பின்னணியில் ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பார்கள். நீல மசூதிக்கும் தாஜ்மகாலுக்கும் ஒரு தொடர்பும் இல்லையென்பதை உரிய தரவுகள் வாயிலாக மறுத்துக் கூறும் அறிவு அன்வரின் உதவியால்தான் கிட்டியது. நீல மசூதி கட்டி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகே தாஜ்மகால் கட்டும் பணி துவங்கியது. தாஜ்மகால் முழுமையாக கட்டி முடிக்கப்பட 21 வருடங்களானது. அன்வரை சந்தித்திருக்காவிட்டால் தாஜ்மகாலின் ஆர்க்கிடெக்ட் உஸ்தாத் அகமது லஹோரி என்பது எனக்கு தெரிய வாய்ப்பே இல்லை. அன்வர் கொடுத்த தகவல் ஏற்படுத்திய ஆச்சரியவுணர்ச்சி தாளாமல் அந்த தகவலை சரி பார்க்கும் உந்துதல் மேலிட நான் திரட்டிய மேலதிக தகவல்கள் முகலாய பேரரசு பற்றி நானறிய உதவியது. பொய்மையும் வாய்மையிடத்து என்பது இது தான் போல! அன்வருக்கு என் நன்றிகள்!
![blue mosque]()
ராணிகேத் வந்தடைந்த அடுத்த நாள் குமாவோன் மலைச்சாலைகளில் நாற்பத்தியைந்து கிலோ மீட்டர் பயணம் செய்து துனகிரி வைஷ்ணோ தேவி கோயில் போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது குகுசினா என்னும் இடம். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் ட்ரெக்கிங் செய்து பாபாஜி குகையை அடைய வேண்டும். அது தான் எங்கள் இலக்கு. துனகிரி அம்மன் கோயிலின் சாலையோரத் திருப்பத்தில் நபினை சந்தித்தோம். நபு என்பது அவன் செல்லப்பெயர். நாற்பது வயதிருக்கும் அவனுக்கு. சராசரி குமாவோன் வாசிகளின் அச்சுஅசல் நபு. அவன் நெற்றியில் பொட்டு. செவ்வாய்க்கிழமையாதலால் வைஷ்ணோ தேவி கோவிலில் நல்ல கூட்டம்! வாடகை ஜீப்புகள் எல்லாம் பிஸி. குகுசினா வரை எங்கள் காரிலேயே போவது என முடிவு செய்தோம். முன்னிருக்கையில் நபு. பின்னிருக்கைகளில் எங்கள் குடும்பம்.
Kainchi Dham – சுவாமிஜியைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதவன் காடு தாண்டி மலை தாண்டி பாபாஜி குகைக்கு குடும்பத்துடன் வருகை தருவதன் பின் என்ன அர்த்தம்? இது முரணாகாதா? தயவு செய்து குழம்ப வேண்டாம். இது ஒரு காதல்! பல வருடம் முன்னர் – எந்த வருடம் என்று ஞாபகமில்லை – படித்த புத்தகத்தின் 34ம் அத்தியாயம் என்னுள் ஏற்படுத்திய ரசாயன மாற்றம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் இது ஒரு சாரமில்லாத வெற்று ஆர்வமாகக்கூட இருக்கலாம். என்னை இதயபூர்வமாக அழைத்தால் நான் அங்கு தோன்றுவேன் என்று தன் பிரியப்பட்ட சீடனுக்கு உறுதி தந்த அந்த மரணமிலா குரு மகாவதார் என்ற அடைமொழியால் பக்தர்களால் போற்றப்படுகிறார். பாபாஜி பற்றிய வரலாற்று பூர்வ தகவல்கள் மிகச் சொற்பம். எனினும் Para Gliding, Apple Garden, Highest Golf Course முதலான ராணிகேத்தின் ஈர்ப்புகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு புதல்விகளின் விருப்பமின்மையையும் புறக்கணித்துவிட்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு அதிகம் பேர் போகாத ஒரு குகைக்கு நான் போவதை பகுத்தறிவு கொண்டு எப்படி விளக்குவது? என் வாழ்க்கை என் விருப்பம் என்று சொல்வது எளிதாயிருக்கும்.
ஒரு புத்தகம் விவரிக்கும் சம்பவம் இத்தனை ஆர்வத்தையா ஏற்படுத்தும்? பொன்னியின் செல்வன் விவரிக்கும் அனுராதபுரம் நகரப்பகுதி வர்ணனைகள் படிக்கப் பிடித்தன. சிவகாமியின் சபதத்தில் வரும் வாதாபி நகர வர்ணனைகளுந்தான்! புத்தக வர்ணனைகளுக்காக மட்டும் அனுராதபுரத்துக்கோ வாதாபிக்கோ (இந்நாளைய பதாமி) டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. இந்த குகைக்கு வர வேண்டும் என்ற விழைவுக்கும் காரணகாரியமான ஒரு விடை இருக்குமென்று எனக்கு தோன்றவில்லை.
பழைய காதலியை மறக்க முடியாமல் அவளின் பழைய விலாசத்துக்கு கடிதம் எழுதுதலை உணர்ச்சி பூர்வ விஷயம் என்றில்லாமல் வேறு எப்படி புரிந்து கொள்வது? பழைய காதலி எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. அவளிடம் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற தவிப்பேற்படும்போது அவள் இருந்த விலாசம் என்று நாம் கேள்விப்பட்ட இடத்துக்கு கடிதம் அனுப்புகிறோம். அது போலவே இது!
![autobiography_yogi_book]()
பாபாஜி குகை ட்ரெக்கிங் கஷ்டமாக இருந்தது. ஃபிட்னெஸ் கொஞ்சம் கூட இல்லாமல் தஸ்புஸ்ஸென்று மூச்சு விட்டுக் கொண்டே ஏறினேன். என் குடும்பத்தினர் வேகமாக ஏறி எனக்கு முன்னால் சென்றுவிட்டனர். காவி ஜிப்பா போட்டுக் கொண்டு ஓர் இளைஞர் இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டேன். பதினைந்து நிமிடங்கள் என்றார். எங்கிருந்து வருகிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டதற்கு சிட்னி என்றார். ஏன் வந்தீர்கள் என்று கேட்டேன். ஒரு புத்தகத்தின் 34ம் அத்தியாயம் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேனே அந்த புத்தகத்தின் பெயரைச் சொன்னார்.
பாபாஜி குகைக்கு சற்று முன்னர் ஒரு மண்டபம் கட்டியிருந்தார்கள். மகாவதார் பாபாஜி லாஹிரி மஹாஷயருக்காக தோற்றுவித்த மந்திர மாளிகையைக் குறிப்பதான இடத்தில் கட்டிய மண்டபம் இது என்பது நபுவின் தகவல்.
பாபாஜி குகையில் சற்று நேரம் அமைதியாக கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தோம். மூச்சு வாங்குதல் நின்றது. நபு குகையைப் பற்றி பேசலானான். அவன் சிறுவயதினனாக இருந்த போது பாபாஜி குகை திறந்திருந்ததாகவும் அதற்குள் இறங்கி உள்ளே சென்றால் இருட்போர்வையில் இனிய சுகந்தங்களின் வாசனை மூக்கை துளைக்குமாம். ஆனந்த உணர்வு மேலிடுமாம். குகைக்குள் டார்ச் லைட்டுகள் வேலை செய்யாதாம். அமெரிக்கர் ஒருவர் ஆர்வமிகுதியில் ஆய்வு செய்கிறேன் என்று குகைக்குள் புகுந்து வெகுநேரமாக வெளியே வராமல் யோகதா ஆசிரமக்காரர்கள் அவரை குகையிலிருந்து வெளிக்கொணர்ந்த போது சித்தம் கலங்கிய நிலையில் இருந்ததாகவும் இதன் காரணமாக குகை வாசல் அடைக்கப்பட்டது எனவும் நபு சொன்னான். நபு சொன்னது விறுவிறுப்பைக் கூட்டிற்று எனினும் அது எத்தனை உண்மையாக இருக்கும் என்ற ஐயம் எழாமலில்லை. உத்தராகண்ட் மாநிலத்தில் பல சுற்றுலா தலங்களில் பார்த்திருக்கிறேன். கைடுகள் இது போன்ற மந்திரம் மாய விஷயங்களை அதிகம் கலந்து பேசுவார்கள். மாநில சுற்றுலா துறையின் வரவேற்பு வளைவுகளும் போர்டுகளும் “தேவ்பூமி” என்னும் உரிச்சொல்லுடன் உத்தராகண்டை விவரித்துக் கொள்வது போலத்தான் இது!
நாங்கள் குகையிலிருந்து இறங்கத் தொடங்குகையில் வெளிநாட்டு ஜோடி ஒன்று குகையை நோக்கி ஏறி வந்தார்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். இத்தாலியின் மிலானோ நகரத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களும் அந்த புத்தகத்தின் பெயரைச் சொன்னார்கள்.
நபுவுக்கும் அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கும் இடையில் என்ன வித்தியாசம்? எழுத்தாற்றல் என்பதைத் தவிர வேறென்ன? எழுதப்பட்ட சொற்கள் சக்தி படைத்தவையாக ஆகின்றன என்பதற்கு ஒரு ஆதாரம் என்றால் இந்த புத்தகத்தைச் சொல்லலாம் என்பது என் கருத்து. மனிதசக்தி உடல்-மனம் என்னும் இருமையின் எல்லைகளை தகர்த்துவிடக் கூடியது என்பதன் சிறு துளி சொற்களின் துணை கொண்டு நமக்கு விவரிக்கப்பட்டிருக்கும்.
நபு என்னுடனும் என் மனைவியுடனும் பேசிக் கொண்டே வந்தான். அவனுடைய குடும்ப வாழ்க்கை, அவனுடைய மனைவியின் மறைவுக்குப் பிறகு மறுமணம் செத்துக்கொள்ளாதிருந்தது, சுவாமி சத்யேஸ்வரானந்தா-வுடனான அவனுடைய தொடர்பு (அவனுக்கு நபின் என்று பெயரிட்டது அவர்தானாம் – குமோவோன்காரனுக்கு வங்காள மொழிப்பெயர் வந்ததன் ரகசியம் இவ்வாறு துலங்கியது), குக்குசினாவில் இருக்கும் ஒரே ஓட்டலின் சொந்தக்காரர் ஜோஷியுடன் அவனுடைய மனஸ்தாபம் என்று பல தகவல்களைப் பகிர்ந்தான். நடிகர் ரஜினிகாந்த் பாபாஜியிடமிருந்து பெற்ற மூன்று மந்திரங்கள், அசைவ உணவு சாப்பிடும் போது அவற்றை ரஜினிகாந்த் சொல்லாமல் இருக்க வேண்டும் என்று பாபாஜி அறிவுறுத்தியது என்று அவன் ஒன்றன்பின் ஒன்றாக தகவல்களை பகிரும் போது நானும் பாபா திரைப்படம் பார்த்திருக்கிறேன் என்று சொல்லலாமா என யோசித்தேன். ஆனால் சொல்லவில்லை. நபுவுக்கு சென்னை எக்ஸ்பிரஸ் என்றொரு செல்லப்பெயர் உண்டாம். பாபாஜி குகைக்கு வருவோரில் 60% தென்னிந்தியர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் தந்தான். அவர்களுக்கெல்லாம் நபுவே கைடாக இருப்பதால் இந்த பெயர் வழங்குகிறதாம். நபுவுக்கும் பிற வடஇந்தியர்கள் போல தென்னிந்திய மாநிலத்தவர்களை மாநில வாரியாக பாகுபடுத்த தெரியவில்லை. எனவே அவன் சொன்ன கணக்குப்படி 60% முழுக்க தமிழர்களாக இருப்பார்கள் என்று சொல்வது கடினம். அதிகமாக தென்னிந்தியர்கள் பாபாஜி குகைக்கு வருவதற்கு காரணம் ரஜினிகாந்த் என்று நபு நம்புகிறான்.
வழியில் ஒரு குடிசை வீடு. அங்கு சற்று நேரம் இளைப்பாறினோம். குடிசைக்காரர் குடிசையில் டீக்கடை நடத்துகிறார். கேட்டால் மேகியும் செய்து தருவார். உத்தராக்கண்ட் மலைப்பிரதேசங்களில் மேகி கிட்டத்தட்ட கோதுமை போல அரிசி போல staple food. டீ வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். நானும் என் மனைவியும் தமிழில் பேசுவதைக் கேட்ட குடிசைக்காரர் எனக்கு குடிசை வாசலில் தொங்கும் ஒரு புகைப்படத்தை காட்டினார். நடிகர் ரஜினிகாந்த் கையில் தடியுடனும் தலைப்பாகையுடனும் ஜிப்பா அணிந்து நிற்கும் புகைப்படம். நாங்கள் உட்கார்ந்திருந்த குடிசை வாசலில் எடுக்கப்பட்ட புகைப்படம். 2013 இல் எடுக்கப்பட்ட படம் என்றார். 2013க்குப் பிறகு அவர் வரவில்லை என்றும் சொன்னார். அந்த ஒற்றை குடிசையைத் தாண்டாமல் ரஜினிகாந்த்தால் கூட நிச்சயம் பாபாஜி குகைக்குச் சென்றிருக்க முடியாது. தகவல் – ஆதாரம் என்னும் ரயில்பாதையில் பயணிக்கிறது தர்க்கம். தர்க்கம் வாழ்க்கையின் இன்றியமையா அங்கம். நாம் வாழ்கிறோம் என்பதற்கு நமக்கு தர்க்கம் தேவைப்படுகிறது. நிரூபித்தல் வாழ்க்கையின் தவிர்க்க முடியா செயல்முறை.
லாஹிரி மஹாஷயர் பாபாஜியை ரத்தமும் சதையுமாக சந்தித்ததாக சொல்லப்படும் சம்பவத்தில் தர்க்கம் அணுவளவும் இல்லை எனினும் 400 கி மீ பயணம் செய்திருக்கிறேன் ; எதற்கும் மெனக்கெடாத நான் ஐந்து கி மீ டரெக்கிங் செய்து அந்த குகையை அடைந்திருக்கிறேன். நான் வந்த தூரத்தை விட அதிக தூரத்திலிருந்து வந்தவர்களை சந்தித்திருக்கிறேன். 1861லிருந்து 1935 வரை பாபாஜியை வெவ்வேறு கட்டத்தில் சந்தித்தவர்கள் பகிர்ந்த அனுபவங்களை பற்றி வாசித்திருக்கிறேன். அவற்றை வாசிக்கும் போது நம்பிக்கையின்மையை என்னால் தவிர்த்துவிட முடிகிறது. திறந்திருந்த பாபா குகையிலிருந்து வந்த சுகந்தம் பற்றி நபி சொல்லும் போது எனக்கு ஆதாரம் வேண்டியிருக்கிறது. முரண்கள் நிறைந்த மனித வாழ்க்கையின் அங்கமாகிய நானும் முரண்கள் நிரம்பியவனாகவே இருக்கிறேன். தர்க்கம் ஒரு வாள். அதை ஏந்தி நாம் விரும்பாதவற்றை வெட்டித் தள்ளுகிறோம். நமக்கு விருப்பமானவற்றின் திசையில் அந்த வாளை சுழற்றாமல் இருக்கிறோம்.
![neemkaroli baba]()
Neem Karoli Baba
குகுசினா வந்த பிறகு குமாவோனில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி எங்கள் பேச்சு திரும்பியது. Kainchi Dham பார்த்தீர்களா என்று கேட்டான் நபு. நீம் கரோலி பாபா பற்றி சொன்னான். கத்திரிக்கோல் தலத்தில் நான் பார்த்த சிலை நீம் கரோலி பாபாவினுடையது. – “ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்பெனி தொடங்குவதற்கு முன்னர் பல வியாபாரம் தொடங்கி நொடித்துப் போனார் ; இந்தியா வந்து நீம் கரோலி பாபாவிடம் வந்து தன் குறையை சொன்னார். பாபாவின் கையில் ஓர் ஆப்பிள் இருந்தது. ஆப்பிள் பாபாவுக்கு மிகவும் பிடித்தது. அந்த ஆப்பிளை சிறிது கடித்து சீடன் ஸ்டிவ்-க்கு தந்தார். இனிமேல் அனைத்தும் வெற்றியில் முடியும் என்று ஆசீர்வதித்தார். ஆப்பிள் உலகின் மிகப் பெரிய டெக்னாலஜி கம்பெனியானது. தன் நிறுவனத்துக்கு ஆப்பிள் என்று ஸ்டிவ் பெயரிட்டதற்கு காரணம் நீம் கரோலி பாபா மீது ஸ்டிவ்க்கு இருந்த பக்தி. ஸ்டீவ் வாயிலாக நீம் கரோலி பாபா பற்றி கேள்விப்பட்ட மார்க் ஸுக்கர்பர்க் (ஃபேஸ் புக்) 2015 இல் Kainchi Dham விஜயம் செய்தார்”
நபு சொன்ன தகவலை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஸ்டிவ் ஜாப்ஸுக்கு இந்திய குருவா? ஓர் ஹிப்பியாக ஸ்டீவ் ஜாப்ஸ் எழுபதுகளில் இந்தியா வந்திருப்பதை பற்றி படித்திருக்கிறேன். மகேஷ் யோகி, ரஜ்னீஷ் போன்றவர்கள் அமெரிக்க இளைஞர்களிடையே அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கிளப்பிய கிளர்ச்சியின் விளைவே ஸ்டிவின் இந்திய விஜயத்துக்கு காரணம் என்பதாகவே என் புரிதல்.
நபு சொன்ன விஷயங்களில் என்னை மிகவும் துண்டுதலை உண்டுபண்ணியது ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இந்த தகவல் தான். நீம் கரோலி பாபா யார்? எப்போது வாழ்ந்தார்? நபு சொன்ன விஷயம் உண்மையா? கைடுகள் வழக்கமாக அடித்து விடுவது போன்றதான பொய்த்தகவலா?
மலைப்பிரதேசத்தில் மொபைல் சிக்னல் சரியாக இல்லை. Data Roaming-உம் வேலை செய்யவில்லை. ராணிகேத் ஓட்டலிலும் இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலை இணையத் தொடர்பு கிட்டியது. Did Steve Jobs visit Kainchi Dham? என்ற கேள்விக்கு விடை தேடினேன்.
![steve_jobs-apple]()
Steve Jobs (Founder of Apple)
இரண்டு குறிப்புகள் கிடைத்தன. நீம் கரோலி பாபாவின் பக்தர் ஒருவர் கீர்த்தனை இசையமைப்பாளர். sacred music என்னும் இசை வகைமையின் முன்னோடி எனக் கருதப்படுபவர். அவர் பெயர் ஜெய் உத்தல். உத்தல் படித்த ரீட் கல்லூரியின் மாணவர் ஸ்டீவ் ஜாப்ஸ். மாணவர் ஸ்டீவை ஒரு முறை சந்திக்கும் போது உத்தல் நீம் கரோலி பாபாவுடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். ஸ்டீவ் அந்த உரையாடலில் கிடைத்த விவரங்களால் ஈர்க்கப்பட்டு தன் நண்பர் ஒருவருடன் இந்தியப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்கிறார். அக்டோபர் 1974இல் Kainchi Dham வருகிறார். துரதிர்ஷ்டவசமாக நீம் கரோலி பாபா 1973இலேயே பூதவுடலை துறந்துவிட்டிருக்கிறார். ஸடீவ் பாபாவை சந்திக்கவில்லை. உத்தலுடனான உரையாடலே தன்னை இந்தியா செல்லத் தூண்டியது என்று ஸ்டீவ் பல முறை குறிப்பிட்டுள்ளதாக ஸ்டீவுடன் சேர்ந்து இந்தியா பயணம் சென்ற நண்பர் பிற்காலத்தில் உத்தலுக்கனுப்பிய மின்னஞ்சலொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னொரு குறிப்பு கிருஷ்ண தாஸ் என்று இன்று அறியப்படும் ஜெஃப்ரே கெகல் என்பவரைப் பற்றியது. இவர் நீம் கரோலி பாபாவின் நேரடி சீடர். பாபாவினுடைய தன் முதல் சந்திப்பை பற்றி இவ்வாறு விவரிக்கிறார் :-
“அவருக்கு ஆப்பிள் பழங்கள் பிடிக்கும் என்று கேள்விப்பட்டிருந்தோம். எனவே ஆப்பிள்களை எடுத்து வந்திருந்தோம். எனக்கு வேடிக்கையாய் இருந்தது. ஆப்பிள்களை அவரிடம் கொடுத்தோம். அவற்றை வாங்கிக்கொண்டார். உடன் அந்த ஆப்பிள்களை அறையில் இருந்தவர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டார். “இவருக்கு நான் கொடுத்த ஆப்பிள்கள் பிடிக்கவில்லை போலிருக்கிறது” என்று நினைத்தேன். என்னை நோக்கினார். ‘நான் என்ன செய்தேன்?’ என்று கேட்டார். நான் சொன்னேன் : ‘எனக்கு தெரியாது’. ‘நான் செய்தது சரியா?’ என்று கேட்டார். நான் மீண்டும் ‘எனக்கு தெரியாது’ என்று சொன்னேன். அவர் திரும்பவும் ‘நான் செய்தது சரியா?’ என்று கேட்டார். ‘நீங்கள் செய்யும் எதுவும் சரி’ என்று பதில் சொன்னேன். அவர் சிரித்தார். பிறகு சொன்னார் “ஒருவனுக்கு கடவுள் இருப்பானாயின், அவனுக்கு எதுவும் தேவையில்லை. அவனிடம் ஆசைகள் இராது’ அவர் சொன்னதைக் கேட்டதும் நான் என்னைப் பற்றி யோசித்தேன். என்னிடம் எவ்வளவு ஆசைகள்! நான் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும் என்பதை உணர்ந்தேன். இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் அவர் என் எண்ணத்தை படித்திருந்ததை எனக்கு காட்டினார். என்னுள்ளில் நான் உணரத்தக்க வகையில் எனக்கு வழி காட்டினார்”
வானிலை சற்று மோசமடைந்திருந்ததால் ஓட்டலிலிருந்து கிளம்ப தாமதமானது. இதனால் தில்லிக்கு கிளம்புமுன் Apple Garden பார்க்கலாம் என்று போட்ட திட்டம் நிறைவேறவில்லை. மோசமான வானிலை காரணமாக Para Gliding spot அன்று மூடியிருந்தது. Golf Course மூடுபனியில் கவிந்திருந்தது. ஓட்டுனர் Kainchi Dham அருகே தேநீர் குடிப்பதற்காக வண்டியை நிறுத்தினார். நாங்கள் காரில் இருந்து வெளியே இறங்கவில்லை. அதே இடத்தில் இரண்டு நாட்கள் முன்னர் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெரியவள் “அப்பா! இந்த கோவிலுக்கு போகவில்லையா?” என்று கேட்டாள். அதற்கு சின்னவள் “நாங்க அன்னிக்கே போயிட்டோம்… இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகணும்னா நீயும் போய் கும்பிட்டுட்டு வந்துடு” என்று பெரியவளைக் கேலி செய்தாள்.
- இதில் குறிப்பிடப்படும் புத்தகம் பரமஹம்ச யோகானந்தர் எழுதிய சுயசரிதம் – Autobiography of a Yogi. இந்நூலின் 34ம் அத்தியாயத்தை இணையத்தில் வாசிக்க → https://www.crystalclarity.com/yogananda/chap34.php
- நீம் கரோலி பாபா பற்றி → https://en.wikipedia.org/wiki/Neem_Karoli_Baba
- ஸ்டீவ் ஜாப்ஸ்-ஸின் இந்திய விஜயத்தின் பிண்ணனி குறித்து → http://www.abc.net.au/radionational/programs/rhythmdivine/jobs-holy-man-and-apple-logo/4609698